தந்தையை பற்றி Dr.Fr.ஸ்டானிஸ்லாஸ் S CMF
அருட்தந்தை ம.ஆண்ட்ரூ செல்வராஜ்
அருட்தந்தையின் ஆன்மா நித்திய இளைப்பாற்றி அடைவதாக!
எங்கள் குடும்பத்தின் மூத்த அண்ணனும், குருவுமாகிய அவர்கள் செய்த மாபெரும் பணிகளை நினைக்கும் பொழுது, எங்கள் உள்ளம் பூரிப்படைகிறது.
ஆசிரியர் பணி செய்துகொண்டிருந்தவர் இறைவன் மீது கொண்ட தணியாத தாகத்தால் குருவாக மாறியவர்.பணத்தையும்,பதவியையும் பட்டத்தையும் ஒரு குப்பையாக கருதுகிறேன் என்ற பவுல் அடியார்கள் வார்த்தைக்கு இவரும் சொந்தக்காரர்.
இறைவன் மீது தணியாத தாகம் கொண்டவர்களாய் அன்னை மரியாள் மீது மிகுந்த பற்று உடையவர்களாய் தன் வாழ்க்கை முழுவதும் இறைபணிக்காகவே தன்னை அர்ப்பணித்தவர்கள்.
மக்கள் மனதில் எப்போதும் அமைதி புறாவாய் தான் பணி செய்த இடங்களில், பணி தளங்களில் முத்திரையை பதித்தவராய், பங்கு மக்களின் மனங்களில் மறையாத அணையாத குலவிளக்காய், ஒழிச்சுடராய் பல குடும்பங்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்வின் பாதைகளை செம்மையாகியவராய் வாழ்ந்தவர் அருட்தந்தை ம.ஆன்ட்ரயூ செல்வராஜ் அடிகளார்.
கோட்டாறு மறைமாவட்டத்தின் அணையாத விளக்கு, ஓர் தூண்.
கோட்டாறு மறைமாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சிகளுக்கு வித்திட்ட மாமனிதர். பிடெல்காஸ்ட்ரோ சொல்வது போல் இந்த உலகத்தில் தடம் பதித்தவர்கள் எல்லாம் மாமனிதர்கள். அந்த தடத்தில் நடப்பவர்கள் எல்லோரும் மனிதர்கள் என்ற சொல்லுக்கு சொந்தக்காரராய், மாமனிதராய் அவர் பணிசெய்த பல்வேறு பணித்தளங்களில் மிகவும் குறிப்பாக கன்யாகுமரி, கோட்டார், கோவளம் அவரை மிகவும் இன்னும் நேசிக்கின்ற குலசேகரம் பங்கு மக்களின் இதயங்களில் இன்றும் அணையாத தீபமாய், மாமனிதராய் திகழ்ந்தவர்.
இவர் ஒரு ஆன்மீகவாதி.செபம் என்பது இவர்களுடைய உயிர்மூச்சு.
செபத்தையும் ம.ஆன்ட்ரயூ செல்வராஜ் அவர்களையும் பிரித்து பார்க்கமுடியாது. தான் இறக்கும் கடைசி நாள் வரை அக்டோபர் 24 , 2021 தான் உயிர்மூச்சை கடவுளிடம் ஒப்படைத்த போது கூட தான் காலை செபத்தை உச்சரித்தவர்.குருத்துவ மூவேளை செபங்களை ஒருநாள் கூட சொல்ல தவறியதில்லை.ஒருநாள் கூட செபமாலை சொல்ல தவறியதில்லை.தன்னுடைய நோயை கூட பொருட்படுத்தாமல் ஒவ்வொருநாளும் கல்வாரி திருப்பலியை ஒப்புக்கொடுத்தவர். இறைமக்களுக்காக ஒவ்வொருநாளும் திருவருட்சாதனங்களை நிறைவேற்றி அதில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அனுபவித்தவர்.
கோட்டாறு மறைமாவட்டத்தின் பல்வேறு நிர்வாக பொறுப்புகளில் இருந்தாலும் குறிப்பாக மறைமாவட்டத்தின் பொருளாளராய், மறைவட்டங்களின் அதிபராய், மறைமாவட்டத்தின் அமைதியெழு தலைவராய் இருந்து குறிப்பாக கடற்கரை கிராமங்களில் அமைதிக்காக நெற்றி வேர்வை சிந்தி உழைத்த மாபெரும் செம்மல்.
அதையும் தாண்டி மதுரை கருமாத்தூரில் உள்ள கிறிஸ்து இல்லம் குருமடத்தில் ஆன்மீக தந்தையாக பல ஆண்டுகள் பணி செய்து பல்வேறு குருமாணவர்களுடைய வாழ்க்கையில் ஒளியை ஏற்றி நல்ல ஆன்மீக குருக்களாக பணி செய்ய வித்திட்டவர்.அதன்பிறகு பெங்களூரு சென்னையில் உள்ள MMI சபையில் மெய்யியல், இறையியல் பயின்ற மாணவர்களுக்கு அதிபராக வழிகாட்டியாக இருந்து அந்த துறவற சபையில் பல்வேறு குருக்களை உருவாக்கியவர்.
அதையும் தாண்டி பல்வேறு இடங்களில் பல துறவற சபை குருக்களுக்கும், அருட்சகோதிரிகளுக்கும், குறிப்பாக DMI அருட்சகோதிரிகளுக்கும்,குருமானவர்களுக்கும் ஆன்மீக குருவாகவும் அவர்களை உருவாக்குபவர்களாகவும் பணியாற்றியவர்கள்.கிறிஸ்துவை மட்டுமே ஆதாயமாக்கி கொண்டு ஆசிரியர் பணியை துறந்து குருவாக மாறி இறை பணியும் மக்கள் பணியும் சமூக பணியும் ,நிர்வாக பணிகளையும் திறம்பட செய்தவர்.
திருவனந்தபுரம் லத்தீன் உயர்மறைமாவட்டத்தில் உள்ள தூத்தூர் புனித jude கல்லூரியின் செயற்குழு உறுப்பினராக பல்வேறு ஆண்டுகள் பணி செய்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்.
இவ்வாறு அருத்தந்தை செய்த பணிகளையெல்லாம் நினைக்கும் போது,இவர் கடவுளுக்கு உண்மையான ஊழியராய், மாதாவின் பாசமிகு மகனாய் புனித பிரான்சிஸ் சவேரியாரின் உண்மையான தொண்டனாய் வாழ்ந்துள்ளார் என்பதை நினைக்கும் போது என்மனம் பெருமிதம் அடைகிறது.எங்கள் குடும்பங்கள் மகிழ்ச்சியில் ஆர்பரிக்கின்றது.
ஒருபுறம் அவருடைய இறப்பு எங்களுக்கு ஒரு இழப்பாக இருந்தாலும் அவர் செய்த பணிகளை நாங்களும் தொடர்ந்து செய்ய நம் அனைவருக்காகவும் விண்ணுலகில் செபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அருட்தந்தை ம.ஆன்ட்ரயூ செல்வராஜ் அவர்களை கடவுள் நம் குடும்பத்திற்கு கொடையாக கொடுத்த கடவுளுக்கு நன்றி கூறுவோம்.
அருட்தந்தை ம.ஆன்ட்ரயூ செல்வராஜ் அவர்கள் ஆன்ம இளைப்பாற்றிக்காக தொடர்ந்து செபிப்போம்.
Dr Fr . ஸ்டானிஸ்லாஸ் S CMF
சகோதரர்