தந்தையை பற்றி Fr. DS சகாயராஜ் MMI
அருள் தந்தை ஆண்ட்ரு M. செல்வராஜ் அவர்களோடு என்னுடைய அனுபவம்
13/09/2002 - அருட்தந்தை அவர்கள் முதன்முதலாக பெங்களூருக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட அறை என்னுடைய அறை அளவு 10-க்கு 15 அடி அதிலேயே அலுவலகம் / தங்கும்ரையும் இருந்தது அது ஒரு வாடகை வீடு. அந்த வாடகை வீட்டில் தொடக்க காலத்தில் MMI குரு மாணவர்கள் ஒரு வருடம் தங்கி இருந்தார்கள்.
மிகவும் எளிமையான வசதிகளை கொண்ட அந்த வாடகை வீட்டில் அவர் எங்களோடு இணைந்து கொண்டு மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்.
அவர் வந்து இறங்கும் போது இரண்டு பெட்டிகளோடு வந்து இறங்கினார். அதில் ஒரு பெட்டியை நான்தான் திறந்தேன். திறந்து பார்த்தபோது,நம் மீட்பரும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவினுடைய திருச்சிலுவை ஒரு அடிக்கு ஒரு அடி அளவில் தன்னுடைய சூட்க்கேசில் வைத்திருந்தார்.
செப்டம்பர் 14ஆம் தேதி மறுநாள் திருப்பலிக்கு திருச்சிலுவை மேன்மையின் விழாவிற்கு எங்களுக்கு பலிப்பீடத்தில் (கோழி கூண்டு) சிலுவை, அன்னை மரியாள் மற்றும் சூசையப்பர் உடைய சுருபங்கள் இல்லாமல் அவதிப்பட்டோம்.
உடனே நான் சென்று அருள் தந்தை ஆன்ட்ரூவிடம் பாதர் உங்க சூட்கேஸ்ல ஒரு சிலுவை இருக்கு அந்த சிலுவையை கோயிலுக்கு குடுங்க என்று கேட்டு எடுத்துக் கொண்டேன்.
அந்த திருச்சிலுவை தான் அடுத்த ஒரு வருடத்திற்கு குரு மாணவர்களாகிய நாங்கள் வாழ்ந்த இடத்தில், பலிப்பீடத்தில் வைத்திருந்தோம்.நாங்கள் மொத்தம் 22 பேரு, ஐந்து ரூமில் இருந்தோம்.
ஒரு ரூம்ல அருள் தந்தை ஆண்ட்ரூ செல்வராஜ் அவர்களும், மற்றொரு ரூம் மூத்த குரு மாணவர்களுக்கும், மூன்றாவது ரூம் கிட்சனாகவும், ஸ்டோர் ரூமாகவும் பயன்படுத்தினோம்.மற்ற இரண்டு ரூம்களில் MMI சபையின் முதல் குரூப், 14 குருமாணவர்கள் தங்கியிருந்தார்கள்.
அந்த காலகட்டத்தில் எங்களுக்கு திருப்பலி நிறைவேற்ற தனி அறை அல்லது ஆலயம் இல்லை. நாங்கள் தங்கியிருந்த அறைகளுக்கு அருகாமையில் ஒரு பாழடைந்த கோழி கூண்டு ஒன்று இருந்தது. அந்தக் கோழி கூண்டில் தான் அருள் தந்தையும் குருமாணவர்களாகிய நாங்களும் எங்களுடைய தினசரி ஜெபங்கள், திருப்பலிகள் நிறைவேற்றினோம்.அந்தக் கோழி கூண்டு தரையும் இழைக்கப்படவில்லை ... தூய்மையாகவும் இல்லை. அந்த கோழி கூண்டு முழுவதும் அஸ் பெட்டா சிட்டால் மூடியிருந்தது.
h my God!!! அருள் தந்தை ஆன்ரூ செல்வராஜ் அவர்கள் எங்களோடு சாதாரணமாக/ எளிமையாக எந்தவித வசதிகளையும் தேடாமல், இருப்பதை வைத்துக் கொண்டு எங்களை வழி நடத்தினார்.
பனி/ குளிர்/ வெயில்/ கொசுக்கள்/ இளம் வயது குரு மாணவர்களோடு எல்லா விதத்திலும் துன்பங்களை அனுபவித்தார்.
ஒரு சில நடந்த நிகழ்ச்சிகள்...
அந்த காலகட்டங்களில் எங்களுக்கு சமைப்பதற்கு ஆட்கள் இல்லாமல் இருந்தோம். அருள் தந்தையும் மிகவும் சாதாரணமான எளிமையான உணவை மட்டும் உட்கொண்டு எங்களோடு வாழ்ந்தார். பல நேரங்களில் பல நாட்களில் தன்னுடைய சொந்த பணத்தை செலவு செய்து எங்களுக்கு உணவு/ இனிப்பு/ ஸ்னாக்ஸ் வழங்கினார்.
நாங்கள் வாழ்ந்த இடம் தொட்ட கன்னலி Dodda Kannali அழைக்கப்பட்டது. நாங்கள் வாழ்ந்த இடம் ஒரு காடு. எங்கள் வாடகை வீட்டிற்கு பின் அடர்ந்த காடுகள் தைல மரங்களால் நிரம்பி இருந்தது.
அருள் தந்தை அதிகாலையில் திருப்பலி முடிந்த உடனே வாக்கிங் செல்வதை ஒரு இயல்பாக கொண்டிருந்தார். ஒரு ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் வழக்கமாகவே வாக்கிங் சென்றதுண்டு. ஒரு நாளு வாக்கிங் போனவர் காணவே இல்லை. நான் அப்பொழுது களப்பணி ஆற்றிக் கொண்டிருந்தேன். வெயிட் பண்ணி பார்த்தோம்..வந்துருவாரு, வந்துருவாங்க என்று நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் அருள் தந்தை திரும்பவே இல்லை.
உடனே அப்பொழுது என்னோடு இருந்து குரு மாணவர்கள் அவரை தேடச் சென்றோம். எந்த பக்கம் போனாருன்னு தெரியலையே சொல்லிட்டு தேடித்தேடி தேடி தேடி ரெண்டு கிலோமீட்டர் தூரமா போயிட்டோம். நடந்தவரு நடந்துகிட்டே இருந்ததால... திரும்பி வருவதற்கு ரூட் தெரியல ரெண்டு மூணு ரோடு குறுக்குல வந்ததால... எந்த பக்கம் போறதுன்னு தெரியாம ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டார்.
நாங்க ஒரு ஒன்றரை மணி நேரம் கழிச்சு ஒரு வழியா போயி அருள் தந்தையை பார்த்தோம். அவர் சிரிச்சாரு ஒரு சிரிப்பு உண்மையிலேயே குழந்தை மனசு.
நாங்கள் அருள்தந்தை யிடம் கற்றுக் கொண்டது, எப்பொழுது பார்த்தாலும் புத்தகம் கையுமாய் இருப்பார்.
திரு அவையின் கட்டளை ஜெபம் வாசிப்பதில் எங்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருந்தார். *திருப்புகழ் மாலை வாசிப்பதை அவர் என்னாளும் தவறியதில்லை.
அருட்தந்தை திருப்புகழ் மாலை வாசிக்கும் பொழுது யாரும் அவரை தொந்தரவு செய்யக்கூடாது. அப்படி அவர் ஜெபிக்கும் பொழுது யாராவது அவரிடம்
Excuse me Father, May I come in Father என்று தொந்தரவு செய்தால் அவனை மண்ணாங்கட்டி என்று கோபமா திட்டி தீர்த்து விடுவார்.
ஒரு நாள் இனிதாக இருக்க வேண்டும் என்றால், எல்லோரும் தவறாமல் காலை ஜெபத்திற்கு நேரத்திற்கு வந்தால் மட்டும் தான் அந்த நாள் எங்களுக்கு இனிதாக அமையும். யாராவது ஆலயத்திற்கோ ஜெபத்திற்கோ தாமதமாக வந்தால், அந்த நாள் முழுவதும் எங்களுக்கு ஒரு மிகவும் கஷ்டமான நாள்.
காலை 05: 30 நிமிடங்களுக்கு எங்களுடைய ஜெபம், தியானம், திருப்பலி ஆரம்பிக்கும் பெங்களூரு என்பதால் சற்று குளிராக இருக்கும் நேரங்களில் இயற்கையாகவே தூங்குவதற்கு இயல்பாக இருக்கும். அந்த காலகட்டங்களில் அருள் தந்தையின் கையில் 120 குரு மாணவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். அனைவருமே 18- 23 வயதுடைய குரு மாணவர்கள்.
காலை ஜெபங்கள் முடிந்த உடனே, மதிய உணவு பேக் செய்து கொண்டு, அனைவரும் 22 கிலோமீட்டர் தொலைவிற்கு பேருந்தில் தர்மாரம் தத்துவியல் மற்றும் இறையியல் கல்லூரி பயணம் செய்ய வேண்டும்.
ஒரு நாள் அருள் தந்தையிடம், குரு மாணவர்கள் எல்லோரும், ஃபாதர் ஒரு நாள் நாங்கள் வெளியே (Lalbagh & Cubbon Park) சென்று வர வேண்டும்.(outing) ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அவருக்கு எங்களை வெளியே செல்வதற்கு அனுமதி கொடுப்பதற்கு விருப்பமில்லை. ஆனாலும் வேண்டா வெறுப்போடு எங்களை வெளியே அனுப்பி வைத்தார்.
அன்று மாலை நாங்கள் அனைவரும் 7pm அளவில் திரும்பி வந்தோம். அவருக்கு சரியான கோபம் வந்து எல்லோரையும் முட்டி போட வைத்து, கோவிலுக்கு போங்க...
காலை ஜெபம், மதிய ஜெபம் ,மாலை ஜெபம் ஜெபமாலை, இரவு ஜெபம் எல்லாத்தையும் சேர்த்து ஜெபித்து விட்டு இரவு உணவுக்கு போங்க என்று கோபமாக கூறி அவரும் எங்களோடு அமர்ந்து ஜெபித்தார்.
அன்று ஒரு நாள் நாங்கள் வெளியே போனதற்கு எங்களுக்கு அளிக்கப்பட்ட பனிஷ்மென்ட் அதுதான்
அதற்குப் பிறகு நாங்கள் அவரிடம் வெளியே செல்வது (outing) பற்றி கேட்கவே மறந்து விட்டோம்.
குரு மாணவர்கள் கட்டளை ஜெபம் ஜெபிக்கும் போது, திருப்புகழ் மாலை புத்தகத்தை மடியில் வைத்துக்கொண்டு, சற்று குனிந்து வாசிப்போம், ஜெபிப்போம். எப்பொழுதெல்லாம் மடியில் வைத்து ஜெபித்தோமோ, அப்போதெல்லாம் அருள் தந்தை எங்களை முட்டி போட வைத்து திருப்புகழ் மாலையை கையில் எடுங்க மடியில வைக்காதீங்க என்று சொல்லி எங்களுக்கு பயிற்சி அளித்தார்.
ஒரு சில நாட்களில் எங்களுக்கு போதுமான பணம் இல்லாத சூழ்நிலைகள் இருந்த பொழுது தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து எங்களுக்கு உணவு வழங்கியவர்.
தினமும் எங்களோடு சேர்ந்து காய் கறி தோட்டத்தில் மண்வெட்டி எடுத்து களைகளை அகற்றி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவார்.
அவருக்கு பிடிக்காதது ஒன்று தோட்டத்தில் களை இருப்பது. வீடு, வீட்ட சுத்தி எந்தவிதமான பில் (புல்லு) இருக்க கூடாது குரு மடத்தில் அவருக்கு பிடிக்காத வார்த்தை புல்லு. சுத்தமா வைக்க சொல்லுவார்.
குரு மடத்தில் காய்கறி தோட்டம் வைத்து செடிகளை வளர்த்து வேலை செய்ய வேண்டும் என்பதை எங்களுக்கு கற்பித்தார்.
எங்கள் சபை நிறுவனர் தந்தை அருள் ராஜ் OMI எங்களை அவ்வப்பொழுது திட்டுவது உண்டு. அருட்தந்தை ஆண்ட்ரு செல்வராஜ் அவர்கள் எங்களை திட்டுவாரு ஆனா ஒரு பொழுதும் எங்கள் அருள எங்களை கைவிட்டதில்லை.
தந்தையிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது அவருடைய புத்தகங்களை படிப்பதில் அவருக்கு இருந்த தாக்கம். எப்போ பாத்தாலும் ஏதாவது படித்துக் கொண்டே இருப்பாரு, டெய்ரி எழுதிக்கிட்டே இருப்பாரு. அவரின் கையெழுத்து ஸ்டைலா இருக்கும். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் போல தலையை குனிஞ்சு என்ன எழுதிவார் என்று எனக்கு தெரியாது. ஆனா எழுதிக் கொண்டே இருப்பாரு.
அப்பப்போ அவரு எழுதிய டெய்ரியை எங்களுக்கு காட்டி சொல்லுவாரு இந்த வயசுல நான் உட்கார்ந்து எழுதுறேன். நீங்களும் எழுதணும், எழுதி எழுதி எழுதி படிங்க என்று குரு மாணவர்களுக்கு அறிவுரை கூறுவார்.
அருள் தந்தை இருந்த காலத்தில், சபையிலேயே எனக்கு மட்டும்தான் குரு பட்டத்தின் முன்பு மூன்று பக்கம் ரிப்போர்ட் கொடுத்தார். மற்ற எல்லோருக்கும் ஒரு பக்கம் ரிப்போர்ட் மட்டும் கொடுத்தார்.
அருள் தந்தை தான் என்னுடைய நவசந்நியாச குருவாக இருந்தார்.
நான் குருப்பட்டம் பெற்ற பிறகு அருள் தந்தையோடு ஒரு வருடம் பெங்களூரில் அவருக்கு துணையாக இருந்தேன். என்னை ஆன்மீகத்தில் தொடர்ந்து வழி நடத்தினார்.
MMI சபையினுடைய தொடக்க காலத்தில் எங்களோடு இருந்து, எல்லா இன்பங்களிலும் துன்பங்களிலும் பங்கு கொண்டு, எளிமையான வாழ்க்கை வாழ்ந்து எங்களுக்கு ஒரு உயரிய எடுத்துக்காட்டாக வாழ்ந்து.... மற்றும் இளம் குரு மாணவர்களை 11 வருடங்கள் வழி நடத்திய எம்முடைய பாசமிகு அருள் தந்தை ஆன்ட்ரூ M செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய உள்ளத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
Fr. DS சகாயராஜ் MMI