குருமட அதிபர், MMI சொசைட்டி பெங்களூர்,புனே மற்றும் சென்னை
14-09-2002 -- 20-03-2015.
முன்னுரை
என்னுடைய குருத்துவ வாழ்க்கையில் ஒரு தூண்டு கோலாகவும் வழிகாட்டியாகவும் ஒரு அதிபர் என்ற நிலையை தாண்டி ஒரு தகப்பனை போல என் கரம் பிடித்து என்னை இறைவனுடைய பீடத்தில் கொண்டு சேர்த்த மரியாதைக்குரிய பேரருட்தந்தை Fr.Andrew selvaraj அடிகளாரை பற்றி என் வாழ்க்கையில் அவர் கடந்து போன பக்கங்களை வார்த்தையாக தொகுக்க கிடைத்ததை என் பாக்கியமாக கருத்துத்துகுறேன்.
தந்தைக்குரிய கருதல்
என்னையும் சேர்த்து நூறுக்கு மேலான தத்துவ இயல் மற்றும் இறை இயல் மாணவர்களுக்கு அதிபராக பெங்களூரில் உள்ள அருள் நிவாஸ் என்கின்ற எம் எம் ஐ குரு மடத்திலே ஏறக்குறைய பத்து ஆண்டுகள் பணி செய்து என்னிடம் ஒப்படைத்தவர்களில் ஒருவரையும் நான் இழக்கவில்லை என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளை உள்வாங்கி மிகவும் கண்ணும் கருதுமாக எங்களை பாதுகாத்தவர்தான் நம் தந்தை.
எங்களுக்கு பரிமாற படும் உணவையே தானும் உண்டு மாணவர்களுக்கு நல்ல உணவு தினமும் கிடைக்க வேண்டும் என்பதை கண்ணும் கருததுமாக பார்த்துக் கொண்டவர் .
சிறு தவறு செய்தாலும் மிகவும் கண்டித்து திருத்துபவர் அதே நேரத்தில் தன் பிள்ளைகளை மற்றவர்கள் அவர்கள் போக்கில் பேசுவதை ஒருபோதும் சம்மதிக்காதவர், எங்களை யார் முன்னிலையிலும் ஒருபோதும் விட்டு கொடுக்காதவர்.
விஷேஷ நாட்களில் எங்களை சுதந்திரமாக மகிழச்சியுடன் இருக்க அன்றய கால அட்டவணையை நாங்களே தீர்மானிக்க அனுமதித்து அதிலே பங்கு கொள்பவர். வருடம் முழுவதும் மிகுந்த கண்டிப்புடன் இருக்கும் எங்கள் தந்தையின் முகம் விஷேச நாட்களில் எங்கள் சந்தோசம் குறைபட கூடாது என அவர் விடுக்கும் கள்ளம் கபடம் இல்லாத அந்த புன்சிரிப்பு அந்த கடவுளையே காண்பிக்கும் .
அவருக்கு என்று நண்பர்கள் கூட்டம் இருந்ததை நாங்கள் கண்டதில்லை, ஓய்வு நாட்களில் அவருக்கு என்று தனி திட்டம் இருந்ததில்லை. அவருக்கென்று இருந்த ஒரே சந்தோசம் எங்கள் குரு மடமும் குரு மாணவர்களும் மட்டுமே இந்த ஒரு விஷயம் மட்டுமே அவர் ஒரு பேரருட்த்தந்தை என்பதை தாண்டி ஒரு தகப்பன் என்று சொல்ல போதுமானது என்று நம்புகிறேன்.
நேர்மையின் சிகரம்
நேர்மையும் உண்மையும் உடைய மனிதர்களிடத்தே இயல்பாகவே ஒரு கம்பீரம் உருவாகும். இதனால் தான் உயரிய இடங்களை அவர்களால் அடைந்து கொள்ள முடிந்தது. எங்கள் தந்தை வகித்த உயரிய பதவிகளும் அவர் செய்த நல்ல செயல்களும் அவரின் கம்பீரமும் அவரின் நேர்மையை எடுத்துரைக்கும். ஒரு போதும் உண்மைக்கு புறம்பாக செயல் படாதவர் , யாருக்காகவும் தன்னுடைய கொள்கைகளை மாற்றி கொள்ளாதவர், பிடித்தவர் பிடிக்காதவர் என்று பாரபட்சம் பார்க்காதவர். சிறந்த ஆளுமையும், சீரிய சிந்தனையும், காலத்திற்கு ஏற்றாற்போல மாறுபடும் சிந்தனைகளை செய்தித்தாள், மாத இதழ், புத்தகங்கள் வழியாக தினமும் தன்னையே மேம்படுத்தி கொண்டவர்.
ஒழுக்கத்தின் உச்சம்
நேரம் தவறாதவர். ஒரு மனிதனுடைய நல்லோழுக்கம் அவர் கடைபிடிக்கின்ற நேரத்தை வைத்து கணக்கிடலாம் என சொல்லலாம். ஒரு நாள் கூட அவர் 5 மணிக்கு பின் அறையில் இருந்து வெளியில் வந்து நான் பார்த்தது இல்லை. உடல் நிலை சரி இல்லாமல் இருந்தாலும் குருமடத்தின் விதிகளை குறிப்பாக ஆன்மீக காரியங்களில் மிகவும் சரியாக தானும் இருந்து மற்றவர்களையும் இருக்க தூண்டுபவர். குருமடத்தின் விதிகள் குருமாணவர்களுக்கு மட்டும்தான் என ஒதுங்காமல் எங்களுடன் இணைந்து பயணிப்பவர். ஜெப நேரம், உணவு நேரம், வேலை நேரம், விளையாடும் நேரம் என எல்லா நிகழ்ச்சியிலும் தன்னையும் சரியாக இணைத்து கொண்டவர். குரு மாணவர்களுக்கு தள்ளாடும் வயதிலும் தன்னுடைய வாழ்க்கையின் மூலம் ஒரு குருவானவர் எப்படி வாழ வேண்டும் என்று கற்று கொடுத்தவர். எங்களிடையே வாழ்ந்த நல்ல மனிதர், இவுலகில் தன் தடம் பதிய வைத்து இன்று இறைவனோடு நமக்காக வேண்டுகின்ற புனிதர் அவர்.
முடிவுரை
இந்த உலகில் யாரும் தனியாக வாழ முடியாது ஒருவருக்கொருவர் உதவி செய்து மனிதநேயத்துடன் இருந்தால்தான் இந்த உலகத்தில் வாழ முடியும். மனிதன் என்பது வெறும் வார்த்தை அல்ல இயற்கை உடைய மிகப்பெரிய படைப்பு அந்த மனிதநேயம் என்பது என்ன என்பதையும் மனிதன் வாழும்போதே புனிதராகலாம் என்பதையும் தன்னுடைய வாழ்க்கையிலே கடைப்பிடித்து காண்பித்தவர் தான் என் தந்தை.
Fr. டென்னிஸ் MMI